அடிப்படைவாத குழுக்களை தடைசெய்ய வேண்டும்!- இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட இதர மதத்தினருக்கு எதிராக வன்முறை, வெறுப்புணர்வு மற்றும் அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அடிப்படைவாத குழுக்கள் குறித்து விசாரணை நடத்தி அந்த குழுக்களை தடைசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது.

slma-new

இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை முஸ்லிம் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், உயிரிழப்புகள், காயங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான பாரிய வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சம் அதிகாரித்துள்ளது.

அளுத்கமவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அங்கு நடத்தப்படவிருந்த பேரணியை தடுத்து நிறுத்துமாறு முஸ்லிம் பேரவை உட்பட முஸ்லிம் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்ததையும் முஸ்லிம் பேரவை நினைவூட்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையும் கட்டாயமானதுமாக உள்ளது என்பது எமது எண்ணமாகும்.

நாட்டில் மீண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஜனாதிபதியின் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்.

கலாசாரங்களுக்கு மரியாதை வழங்குவது, இன மற்றும் மத சகிப்பு தன்மை என்பது இந்த நாட்டின் தொன்மையான பாரம்பரிய வளமாக இருந்து வந்துள்ளது.

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் நடந்த வன்முறைகள் தன்னிச்சையாக நடக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக பொதுபல சேனா, சிஹல ராவய, இராவணா பலய ஆகிய அமைப்புகள் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகள் மீது மூலோபாயமாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அடிப்படைவாதிகள் முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகளை தூண்டி வருவது நிறுத்தப்பட வேண்டும்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடத்த தவறு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நடந்து விடக் கூடாது என்பது முக்கியமானது.

தனிப்பட்ட மோதல்கள் நாட்டில் இன வன்முறை நாட்டில் தொடர்ந்து விடக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

Related Posts