அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
வவுனியா பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில், அச்சங்கத்திற்குச் சொந்தமான காணியிலேயே தேக்கமரக்காடு உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காணியின் எல்லைப் பகுதியில் சுமார் 10,000 பனை மரவிதைகள் நாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்டமாக 05 ஏக்கரில் 4இ000 தேக்க மரக்கன்றுகளை நடுகை செய்யும் பணியே இப்போது இடம்பெற்றுள்ளது.
வவுனியா பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வே.கண்ணன் தலைமையில் நடைபெற்ற தேக்க மரக்கன்றுகளை நடுகை செய்யும் நிகழ்ச்சியில் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் க.தா.லிங்கநாதன், இரா.இந்திரராசா, ம.தியாகராஜா, எம்.பி.நடராசா மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவிஆணையாளர் கு.ரவீந்திரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு தேக்க மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.