அஜித் பற்றி பேசி வம்பில் மாட்டிய சிம்பு

நடிகர் சிம்பு, பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விக்கு, நேற்று முன்தினம் பதில் அளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர், உங்கள் படங்களில், அஜித் பற்றிய காட்சிகள் இடம்பெறுவது ஏன்? என, கேள்வி எழுப்பினார். அதற்கு, அஜித்தை யாருமே கண்டுகொள்ளாதபோது, நான் தான் முதலில் அவரை, தல… தல… என, என் படங்களில் தூக்கி வைத்து கொண்டாடினேன் என, பதிலளித்தார்.

இந்த பதில், சிம்புவால் தான் அஜித் உயர்ந்தார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால், அஜித் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால், சிம்பு தன் பதிலுக்கு நேற்று விளக்கம் தந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

நான், தீவிர ரஜினி ரசிகன்; எல்லாரும் ரஜினி பற்றி பேசிய போது, எந்த பின்புலமும் இல்லாமல் தனிநபராக சினிமாவுக்கு வந்த அஜித் பெயரை, நான் தான், முதன் முதலில் என் படங்களில் பயன்படுத்தினேன்; அவர் பற்றி பேசினேன். அதன்பின், மற்றவர்கள் பேசத் துவங்கினர்.

அஜித்தை கொண்டாடியதில், நான் தான் முதல் ஆளாக இருந்தேனே தவிர, நான் தூக்கி வைத்து கொண்டாடியதால் அவர் முன்னுக்கு வரவில்லை. அவரது கடின உழைப்பு, அவரை தூக்கி நிறுத்தியது; என் பதிலை தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

Related Posts