அஜித்-சசிகலா சந்திப்பு உண்மையா?

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் நேற்று இரவு போயஸ் இல்லத்தில் சந்தித்து பேசியதாக வெளியான தகவல்களில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் ஒதுங்கியே இருப்பவர் நடிகர் அஜித். சிறுத்தை சிவாவின் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அஜித், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நிலையில், ஜெயலலிதா மறைந்ததும், சென்னை திரும்பி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், அஜித் நேற்று இரவு போயஸ் இல்லம் சென்று சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுக மற்றும் அஜித் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்த சந்திப்பை, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் ஒரு டிவிட்டில் உறுதி செய்தார்.

அதேநேரம், அஜித், சசிகலாவை சந்தித்தது குறித்த எந்த புகைப்படமும், வீடியோவும் வெளியாகாதது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அஜித், சசிகலாவை சந்திக்கவில்லை என்பதை போல ஒரு மீம் வெளியிட்டுள்ளார் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில துணை செயலாளர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் அஜித் சந்திப்பு குறித்த செய்தி வெளியாகவில்லை. நேற்று இரவு திரையுலகிலிருந்து சசிகலாவை சந்தித்த ஒரே நபர் நடிகை ஸ்ரீதேவி மட்டும்தான் என்று கார்டன் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.

அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதனிடையே சசிகலாவுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் நிலவுவதையும் அதிமுக கவனித்து வருகிறது. எனவே அஜித் போன்ற ஒரு பிரபலத்தின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதிமுக தகவல் தொடர்பு பிரிவில் சிலர் செய்த மாய்மாலம்தான் இந்த வதந்தி என தகவல்கள் கூறுகின்றன.

இந்த வதந்தி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அல்லது அஜித் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே அஜித்தான் அதிமுகவின் சார்பில் முன்னிருத்தப்பட உள்ள அடுத்த முதல்வர் என கேரளா, கர்நாடகா மாநில டிவி சேனல்கள் வதந்தி பரப்பி வரும் நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார்களா?

Related Posts