யாழ்.குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்ற எதிரியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அந்தப் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து 31ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தப் பிணை மனு தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி யாழ்.மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கின் எதிரிக்கு அவசரமாகப் பிணை வழங்க முடியாது என தெரிவித்து, முற்று முழுதான பிணை கட்டளை வழங்குவதற்காக வழக்கு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அச்சுவேலி கதிரிப்பாய் என்ற இடத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி நித்தியானந்தன் அருள்நாயகி, நித்தியானந்தன் சுபாங்கன், யசோதரன் மதுஷா ஆகிய மூவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் மறுநாள், பொன்னம்பலம் தனஞ்செயன் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றின் உத்தரவிற்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.
இந்த சந்தேக நபரை பிணையில் விடுமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்த மனு மீதான கட்டளை வழங்குவதற்காக ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அந்த பிணை மனுவையும் தள்ளுபடி செய்தார்.
அப்பபோது வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் 3 கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இது பாரதூரமான சம்பவமாகும். இந்தக் கொலைகள் இடம்பெற்றதையடுத்து, யாழ் குடாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டிருந்தது. எனவே, இந்த வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் செல்ல அனுமதித்தால், அவர் நாட்டை விட்டு தப்பியோடக் கூடிய சூழல் இருக்கின்றது.
அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சிகளை அச்சுறுத்தக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல், மேல் நீதிமன்ற கொலை வழக்கு விசாரணையில் முன்னிலையாகாமல் தலைமறைவாகக் கூடிய வாய்ப்பும் இருக்கின்றது.
இந்த மூன்று கொலைகளுக்கும் குற்றவாளியாக ஒருவர் காணப்பட்டால் தண்டனைச் சட்டக் கோவை 296 ஆம் பிரிவின் கீழ், அவருக்கு 3 மரண தண்டனைகள் விதிக்க முடியும். அந்த அளவுக்கு இது பாரதூரமான குற்றச் செயலாகும்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை கோரும் விண்ணப்பமானது பிணை கட்டளைச் சட்டத்தின் 13ஆம் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு, பிணை வழங்க வேண்டுமா இல்லையா என்பது மேல் நீதிமன்ற நீதிபதியின் தற்துணிவு அதிகாரத்தைக் கொண்டதாகும்.
இருப்பினும் மேல் நீதிமன்ற நீதிபதி இத்தகைய தற்துணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது, அது நீதி நியாயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளதால் இந்த சந்தேக நபருக்குப் பிணை வழங்குவது சமூககத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த நீதிமன்றத்தினால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. அத்துடன் இந்தப் பிணை மனுவை தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.