அச்சுவேலி முக்கொலை ; இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது.

சாட்சியப்பதிவில் கொலை சம்பவத்தில் தடயப் பொருள் ஆய்வினை செய்த யாழ்.சோக்கோ பொலிஸ் பிரிவில் சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடமையாற்றியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியமளித்தார்.

இதன்போத தான் அச்சுவேலி ஜே.282 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற குறித்த முக்கொலை தொடர்பாக தடயப்பொருட்களை சேகரிக்க சென்றிருந்தேன்.

கொலை சம்பவமானது 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை ஒரு மணிக்கு இடம்பெற்றிருந்தது.

தான் சென்று சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்டிருந்த உடலில் இருந்து வந்த இரத்த படிவுகளையும், இரண்டு இடங்களில் காணப்பட்ட தலைமுடிகளையும் வீட்டின் முற்றத்தில் இருந்த நைலோன் கயிற்றையும் சேகரித்து தடயப்பொருட்களாக இணைத்திருந்தேன்.

அதன் பின்னர் தடயப் பொருட்களை அச்சுவேலி பொலிஸ் ஊடாக பிணச் சோதனை நடவடிக்கையின் போதும், பொலிஸாரது புலன் விசாரனையின் போதும், கைப்பற்றப்பட்ட கத்தியின் இருந்த இரத்த கறையுடனும், இறந்தவரின் உடலில் இருந்த இரத்த மாதிரியுடனும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி ஆய்வு செய்வதற்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தியிருந்தேன்.

இதன்பின்னர் குறித்த தடயப் பொருட்களை ஜின்டெக் நிறுவனத்திற்கு வழங்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றானது கட்டளை பிறப்பித்திருந்தது என சாட்சியமளித்திருந்தார்.



இதனை தொடர்ந்து குறித்த சாட்சியிடம் எதிரி தரப்பு சட்டத்தரணி திருக்குமரன் குறுக்கு விசாரனை செய்திருந்தார்.

அதாவது முற்றத்தில் கைப்பற்றப்பட்ட நைலோன் கயிறு யாருடையது என உங்களுக்கு தெரியுமா என குறித்த சாட்சியிடம் சட்டத்தரணி வினவியபோது அதற்கு குறித்த சாட்சி தமக்கு தெரியாது என பதிலளித்திருந்தார். இதனை தொடர்ந்து குறித்த சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.



Related Posts