Ad Widget

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை விரைவில் திறப்பு

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் தொழில் முயற்சியாளர்களது கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

atchu5

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் அவர்கள் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி சகிதம் நேற்றய தினம் (11) விஜயம் மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிக் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்ட அதேவேளை, கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்களை கட்டம் கட்டமாக முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தொழில் முயற்சியாளர்களது எதிர்காலத் திட்டங்கள் அவர்களால் வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தொழிற்பேட்டை வளாகத்தில் பூங்கன்றுகளையும் ஏனைய பயன்தரு மரங்களையும் நடுகை செய்து அப்பகுதியை அழகுபடுத்துவதற்கும் மெருகூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் தொழில் முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப்பணிகளையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை எதிர்வரும் 23 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நவாப் ரஜாப்தீன், வலி கிழக்கு பிரதேச செயளர் பிரதீபன், கைத்தொழில் அபிவிருத்தி சபை பணிப்பாளர் ரட்ண மழல, பிரதிப் பணிப்பாளர், ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச இணைப்பாளர் இராமநாதன் ஐங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts