அச்சுவேலியில் பதற்றம்

land-regஅச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ஆம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (21) பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார். நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப்பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது. நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

Related Posts