அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் எனக் கருதப்படும் வாகனச் சாரதி ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற இரு சைக்கிள்களும் ஆவரங்காலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:-
வெளிநாட்டில் இருந்து வந்து அச்சுவேலி கிழக்கில் தங்கிநின்ற ஒருவரின் வீட்டில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கியும் வாள் முனையில் அச்சுறுத்தியும் 70 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டனர். இதேபோன்று அந்த வீட்டுக்கு அண்மையாக இன்னொரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி 15 பவுண் நகைகளை கொள்ளையிட்டனர்.
பின்னர் 1.30 மணியளவில் நவக்கிரியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி 15 பவுண் நகைகளையும் 25 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டதுடன் இரு சைக்கிள்களையும் பறித்து சென்றனர்.
சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள் ஆவரங்காலில் அந்தச் சைக்கிள்களை கைவிட்டு, அங்கிருந்து வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது. கொள்ளையர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.