புலி ஆதரவு துண்டுபிரசுரங்கள் ஒட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள், உடனடியாக கைது செய்யப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருமுறை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் யாராவது இது வரை கைது செய்யப்பட்டுள்ளனரா? என்று எழுப்பட்ட கேள்விக்கு, அது தொடர்பில் அடுத்தவாரமே பதிலளிக்க முடியும் என்று கூறியுள்ளார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.திலகரட்ண.
வட பகுதியில் புலிகளுக்கு ஆதரவான துண்டுபிரசுரங்களை ஒட்டினர் என்று தெரிவித்து, கைதுகள் இடம்பெறுகின்றன. அவற்றை ஒட்டியவர்கள் என்று கூறி யாராவது உடன் கைது செய்யப்படுகின்றனர். யாழ்.இந்துக் கல்லூரியை அண்மித்த பகுதியிலும் புலிகளுக்கு ஆதரவான துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டன என்று தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் இருதடவைகள் வெவ்வேறு நாள்களில் உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டன. அவற்றை ஒட்டியவர்கள் என்று சந்தேகத்தின் பேரில் யாராவது இதுவரை கைதானார்களா? என்று செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது.
அதற்குப் பதிலளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், இந்த விடயம் தொடர்பிலும், ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தொர்பிலும் அடுத்தவாரம் பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.