யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசமுள்ள அசோகா விடுதி, வீடுகள் மற்றும் காணிகளை மீள மக்களிடம் கையளிப்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த ஒருபகுதி காணி, அண்மையில் பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு பிரினரால் விடுவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான பல வீடுகளில் பொலிஸார் தொடர்ந்தும் தங்கியுள்ள நிலையில், மக்கள் மீளக் குடியேற முடியாத நிலை இருப்பதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதை ஊடகவியலாளர்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில் , வலி. வடக்கில் மீள் குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்டவை தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.