‘டிவிட்டர் இந்தியா’ திடீரென முக்கியமான பலரது அக்கவுண்டுகளை முடக்கியதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு கிளம்பியிருந்தது. ஆனால் எதிர்பாராமல் இதுபோல நடந்துவிட்டதாக கூறி டிவிட்டர் சார்பில் அதன் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிவிட்டர் பயன்பாடு தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களில் டிவிட்டர் கணக்கு வைக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வார இறுதி நாள் என்பதால் இன்று டிவிட்டரில் பலரும் ஆக்டிவாக இருந்தனர். ஆனால் திடீரென பலரது டிவிட்டர் கணக்குகள் முடங்கிவிட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த பயனாளர்கள் ‘டிவிட்டர் இந்தியா’ நிறுவனத்துக்கு இ-மெயில் மூலமாக புகார்களை அனுப்பினர். டிவிட்டர் முடக்கிய அக்கவுண்டுகளில் பெரும்பாலானவை இந்துத்துவா ஆதரவு கருத்து கொண்டவர்களுடையதாக இருந்தது.
இந்து கடவுள்கள் படங்களை டி.பியில் வைத்திருந்தவர்கள் அக்கவுண்டுகள் அதிகமாக முடக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் சிலரின் டிவிட்டர் அக்கவுண்டுகளும் திடீரென முடங்கின. அவர்களுடைய அக்கவுண்டில் ஸ்பேம் என்று மெசேஜ் வந்தது. இதையடுத்து தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கும் பல பத்திரிகையாளர்கள் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றனர்.
தொழில்நுட்ப கோளாறால் இதுபோல நடந்துவிட்டதா, அல்லது வேண்டுமென்றே இதுபோன்ற முடக்குதல் வேலையை டிவிட்டர் செய்துள்ளதா என்ற குழப்பம் டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் நீடித்து வந்தது.
இந்நிலையில், டிவிட்டர் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் நடந்த குழப்பங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எதிர்பாராமல் சிலரது அக்கவுண்டுகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக பயனாளிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த டிவிட்டில் கூறப்பட்டுள்ளது.