அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் நேற்று நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வேம்படி மகளீர் கல்லூரியை சேர்ந்த ஜே.டினோஜா 19 வயது பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாலை அணிவித்து குறித்த மாணவி வரவேற்கப்பட்டதுடன் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படுள்ளது. இதன் போது உரையாற்றிய கல்லூரி அதிபர்,
அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையினை இட்டு நாம் பாடசாலை சார்பில் பெருமைப்படுகின்றோம்.
இவருடைய இந்த சாதனையானது எமது கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. குறித்த மாணவி தனது அக்கறையுடன் செயற்பட்டதால் தான் வெற்றியை பெற்றுள்ளார்.
இவர் 118 கிலோ பாரத்தை தூக்கியே பாடசாலைக்கு வரலாற்று சாதனையாக உள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கும் பெருமையாக உள்ளது.
ஒவ்வொரு மாணவர்களிடத்திலும் 120 வகையான திறன்கள் காணப்படுகின்றன. இவ்வாறு மறைந்து காணப்படும் திறன்களை இனங்கண்டு அந்த வழியில் வழிப்படுத்திச் சென்றால் நிச்சயமாக ஒவ்வொரு பிள்ளைகளும் சாதனை படைப்பவர்களாக வர முடியும்.
எனவே ஒவ்வொரு பிள்ளைகளும் உங்களுடைய மனதில் ஒரு இலட்சியத்தை உருவாக்கி அதனை நாளாந்தம் தியானித்து வரவேண்டும் இவ்வாறு வந்தால் தான் வெற்றியடையலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மாணவியே கடந்த முறையும் பளு தூக்கல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.