அகாஷி – விக்னேஸ்வரன் சந்திப்பு?

vickneswaranஇலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யசூசி அகாஷி கொழும்பை வந்தடைந்தார்.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்துவுள்ளார்.

வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து தேசிய நல்லிணக்கத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே யசூசி அகாஷியை இலங்கை அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாகாண சபை தேர்தலிற்கு பின்னரான யசூசி அகாஷியின் விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வட மாகாண முதலமைச்சரை எங்கு, எப்போது சந்திப்பார் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது யசூசி அகாஷி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வாரா என அவரிடம் வினவியதற்கு, ‘யாழ். விஜயம் குறித்து இதுவரை எந்த தீர்மானமுமில்லை’ என்றார்.

எவ்வாறாயினும் இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, எதிர்வரும் 10ஆம் திகதி இரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவுள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வார் எனவும் அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.

எனினும், யசூசி அகாஷியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக யார் கலந்துகொள்வது குறித்து இறுதித் தீர்மானம் எதுவுமில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி கடந்த 2002ஆம் நியமிக்கப்பட்ட பின்னர் 23ஆவது தடவையாக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts