உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடல் மார்க்கமாக செல்லும் அகதிகள் பாதுகாப்பற்ற முறையில் ரப்பர் படகு, மரப்படகு போன்றவற்றில் பயணம் செய்கிற போது பல நேரங்களில் விபத்து நிகழ்ந்து விடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து இத்தாலி செல்வதற்காக ரப்பர் படகு ஒன்றில் ஏறி புறப்பட்டனர். புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த படகு லிபிய கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் இருந்த 21 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஆண் ஒருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மனித உரிமை குழுவை சேர்ந்த ஒருபிரிவினர் மத்திய தரைக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு 2 ரப்பர் படகுகள் கவிழ்ந்து கிடப்பதை கண்டு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 50 சிறுவர்கள் உள்பட 209 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர்.