இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளை தரையிறக்குவதற்கு இந்தோனேசிய மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை அதிகாரிகளை சந்திப்பதற்கு இடமளிக்க வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த அகதிகள் ஏற்கனவே ஆபத்தான மற்றும் நீண்ட கடல் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் அவர்களை தரையிறக்க அனுமதி வழங்கவேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பிரசார பணிப்பாளர் ஜோசப் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அகதிமுகாம்களில் தங்கியிருந்த 44 இலங்கை அகதிகள், படகு மூலம் அவுஸ்திரேலிய செல்ல முயன்ற நிலையில், அவர்கள் சென்ற படகு இயந்திர கோளாறு காரணமாக கடந்த 11ஆம் திகதி இந்தோனேசிய கடற்பரப்பில் கரையொதுங்கியது.
இவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் 9 குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கு இந்தோனேசியா உதவிக்கரம் நீட்டவேண்டுமென பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் குறித்த படகை சர்வதேச கடற்பரப்பில் தள்ளிவிடக்கூடுமென அச்சம் எழுந்துள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது.