‘வடக்கின் அபிவிருத்தி தடைகள் நிவர்த்தி செய்யப்படும்’ : யாழில் ஜனாதிபதி

‘வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

‘இரணைமடுக் குளம் புனரமைப்புப் பணிகளில், சுற்றாடல் அதிகார சபை, கனிய வளங்கள் திணைக்களங்கள் உள்ளிட்ட திணைக்களங்கள் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், குளத்தை புனரமைப்புச் செய்ய முடியாதுள்ளது. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கரிசனை எடுத்து, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஜனாதிபதி, தனது உரையின் போது, அதற்கானப் பதிலை கூறினார். பதிலளித்த ஜனாதிபதி, ‘அபிவிருத்தி தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். அபிவிருத்திப் பணிகளுக்கு ஒருவரும் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அதனால், வறுமையையும் ஏழ்மையும் தான் ஏற்படும். அனைவரும் போராட வேண்டும். அதற்காக துப்பாக்கி ஏந்திப் போராடுவது என்று அல்ல. அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்காக அனைவரும் அதனை நோக்கியதாக போராட வேண்டும். வடக்கில், மீன்பிடி, விவசாயம் முக்கிய தொழில்களாக காணப்படுகின்றன. அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைய நான் நன்கு உணர்வேன்’ என்றார்.

இந்நிகழ்வில், கல்லூரியின் 200ஆவது ஆண்டை நினைவுபடுத்தி முத்திரை வெளியிடப்பட்டது. அதனை ஜனாதிபதி வெளியிட்டு வைத்தார். கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கான தர்மலிங்கம் சித்தார்த்தன். அங்கஜன் இராமநாதன், முன்னாள் அமைச்சர் கே.என்.டகளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு முன்னதாக, யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற போதை ஒழிப்பு நிகழ்வில், ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது, போதையை ஒழிப்பது தொடர்பில் சத்தியப்பிரமாணமும் மேற்கொள்ளப்பட்டது.

Related Posts