ஸ்கந்தா ஸ்டார்ஸ், விக்டோரியன்ஸ், யங்ஸ்ரார்ஸ் அணிகள் வெற்றி

JPL-logo
யாழ்ப்பாணம் பிறீமியர் லீக் டுவெண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற போட்டிகளில் யங்ஸ்டார்ஸ், மூளாய் விக்டோரியன்ஸ் மற்றும் ஸ்கந்தா அகிய அணிகள் வெற்றிபெற்றன.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் யாழ்ப்பாணம் பிறீமியர் லீக் டுவெண்டி – 20 துடுப்பாட்டப் போட்டிகள் மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியின் முதற்சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதில், சனிக்கிழமை (14) 3 போட்டிகள் இடம்பெற்றன.

முதலாவது போட்டியில் யங்ஸ்டார்ஸ் அணியினை எதிர்த்து திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற வாலிபர் சங்க அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி 16.3 பந்துபரிமாற்றங்களில் 96 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பி.பந்துஷன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்தவீச்சில் யங்ஸ்டார்ஸ் அணி சார்பாக எம்.குமுதன், எஸ்.கோபிகாந்த் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

97 என்ற வெற்றியிலக்கினை நோக்கிப் பதிலக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யங்ஸ்டார்ஸ் அணி, 19.1 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எம்.குமுதன் 19, எஸ்.சுஜன் 16 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வாலிபர் சங்க அணி சார்பாக, என்.நிசாந்தன் 3, ஜே.ஜெயராஜ், அ.சுபாஸ்கர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக யங்ஸ்டார் அணியின் எம்.குமுதன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் மூளாய் விக்டோரியன்ஸ் அணியினை எதிர்த்து திருநெல்வேலி விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி விளையாட்டுக்கழகம் 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சிவராஜ் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் விக்டோரியன்ஸ் சார்பாக, எஸ்.தனுஜன் 4, வி.விபுலன், என்.ஐங்கரன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

92 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மூளாய் விக்டோரியன்ஸ் அணி, 17.4 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பபட்டத்தில் எஸ்.கணேசநாதன் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக எஸ்.லவகாந்த் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக எஸ்.கணேசநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவது போட்டியில் ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணியினை எதிர்த்து மானிப்பாய் பரிஷ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற மானிப்பாய் பரிஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் என்.நிரோஜன் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் அணி சார்பாக, எஸ்.கிஷோக்குமார் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

149 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மானிப்பாய் பரிஷ் அணி 17 பந்துபரிமாற்றங்களில் 139 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.கிஷோக்குமார் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்கந்தா ஸ்டார்ஸ் சார்பாக, கே.ஜெனக்ஷன் 3, எம்.விஸ்ணுப்பிரகாஸ், என்.சஞ்சயன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியில் சிறப்பாட்டக்காரராக எஸ்.நிரோஜன் தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts