விஜய், அட்லி கூட்டணி உறுதியானது!

விஜய் நடித்த தெறி படத்தை இயக்கியவர் அட்லி. அதன்பிறகு இரண்டு படங்களை தயாரித்து வருபவர், தான் இயக்கும் புதிய படம் குறித்த தகவலை வெளியிடாமல் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது, இப்போதைக்கு அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடக்கிறது. இன்னும் முடிவாகவில்லை, முடிவானதும் நானே தெரிவிப்பேன் என்று கூறி வந்தார். அதோடு டைரக்டர் மகேந்திரன் இயக்கும் படத்திற்கு வசனம் எழுதப்போவதாகவும் சொன்னார். ஆனால் அந்த படவேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

vijay-adly

இந்நிலையில், தற்போது பைரவா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்தப்படியாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு உறுதியான செய்தியும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்து சுந்தர்.சி தனது சங்கமித்ரா படத்தில் நடிக்க விஜய்யை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அந்த சரித்திர படத்தில் நடிக்க அவர் சம்மதம் சொல்லவில்லை என்றொரு செய்தியும் வெளியானது.

ஆனால் இப்போது, சங்கமித்ரா படத்தை தயாரிக்கயிருப்பதாக கூறப்படும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படமொன்றில் விஜய் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அந்த படத்தை சுந்தர்.சி இயக்கவில்லை. தெறி இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஆனால் அந்த படம் பைரவா முடிந்ததும் தொடங்கப்படுகிறதா? இல்லை அதற்கடுத்து விஜய் இன்னொரு படத்தில் நடித்து முடித்த பிறகு தொடங்கப்படுமா? என்பது இப்போதைக்கு சஸ்பென்சாக உள்ளது.

Related Posts