வல்வெட்டித்துறையின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது தலைவர் மட்டும் ஆதரவளித்த நிலையில் ஏனைய ஆறு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்து பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இரு தடவைகள் குறித்த வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதும் உறுப்பினர்கள் சமூகம் அளிக்காத காரணத்தினால் கூட்டம் நடைபெறவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய குலநாயகம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதைய தவிசாளருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் கூட்டங்களில் எதிராக செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதென்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவிக்காக நகர சபையின் அபிவிருத்தித் திட்டங்களை பாதிப்படையச்செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்மூலம் தற்போது தவிசாளராக இருக்கும் ந.அனந்தராஜ் தானாக பதவியை விட்டு விலக வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான திட்டங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிக்கச்செய்துள்ளனர் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.