வலி.வடக்கு மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – செந்தூரன்

tellippalai - army-sara‘யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இராணுவ காவலரண்கள் மற்றும் மினி முகாம்கள் அகற்றப்படுவது போன்று வலி.வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களையும் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்’ என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி உதய பெரோவிடம் சிறீடெலோ கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘யாழ் குடாநாட்டிற்கு புதிய இராணுவத்தளபதியாக பதவியேற்றதிலிருந்து பல மாற்றங்கள் இடம்பெறுவதோடு இராணுவ முகாம்கள் அமைந்திருந்த மக்களின் வீடுகளும் மீளவும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

அதேபோன்று வலி.வடக்கு போன்ற பல பிரதேசங்களில் இன்று வரை எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளக்குடியமர முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுவருவது உண்மையாயின் எமது மக்கள் மீது கரிசனை கொண்டு வலி வடக்கு போன்று இன்று வரை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படாத பிரதேசங்களில் மக்களை உடனடியாக முழுமையாக மீள்குடியேற்ற முடியாவிட்டாலும் படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் வலி. வடக்கு போன்ற மீளக்குடியேற்றப்படாத பிரதேசங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லையாயின், இராணுவ காவலரண்கள் மற்றும் மினி முகாம்கள் அகற்றப்படுவது, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தில் அரசாங்கம் தனக்குவரும் அழுத்தங்களிலிருந்து தன்னைக் காப்பாற்ற மேற்கொண்ட சூழ்ச்சி என மக்கள் கருதுவார்கள்.

எனவே இவற்றினை கருத்தில் கொண்டு அப்பகுதியையும் உடனடியான விடுவிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்’ என்று அந்த கோரிக்கை தொடர்பான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts