வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட வேலைத்திட்டம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேசச சபை தவிசாளர் பிரகாஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மழைக்காலம் மீண்டும் தொடரும் வேளைகளில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பொது வைத்திய அதிகாரி பணிமனையினருடன் இணைந்து டெங்கு நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பட்டடார்.

இதன் முதற்கட்டமாக சுன்னாகம் நகர்ப்பகுதி மற்றும் சந்தை வர்த்தக நிலையங்கள் அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் புகையூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் பிரதேச சபையின் பெரும்பாலான குப்பைகள் சேருகின்ற அல்லது சேர்க்கப்படுகின்ற பகுதிகளிலிருந்து உப அலுவலக ரீதியான ஒழுங்கு முறைப்படி கழிவகற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.

டெங்கு நோய்த் தாக்கமுள்ள அல்லது நோய்க்காரணிகள் பரவ ஏதுவாகவுள்ள இடங்களிலும் நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டிற்கு பொது வைத்திய அதிகாரி பணிமனையினர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச செயலர், கிராம அலுவலர்கள் இணைந்து பங்காற்றி வருவவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts