வலம்புரி செய்தியாளா் மீது 6 போ் கொண்ட குழு தாக்குதல்

வலம்புரிப் பத்திரிகையின் அலு வலகச் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது-22) மீது இனம் தெரியாத, சுமார் 6 பேர் கொண்ட குழுவினர் வீதியில் வைத்து மூர்க்கத் தனமாக தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கும் 3.45 மணிக்கும் இடையில் மூன்று இடங்களில் வைத்து தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுப் கோபுர வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது பொருளியல் கல்லூரிக்கு அருகில் உள்ள வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த இனம்தெரியாத நபர்கள் இருவர் இடை மறித்து சாளினின் முகத்தில் குத்தியதோடு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலிலிருந்து ஒருவாறாக சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்த செய்தியாளர் சாளின், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது முன்பு தாக்குதல் மேற்கொண்ட நபர்களுடன் சுமார் ஆறு பேர் கொண்ட குழுவினர் இடைமறித்துள்ளனர். இதன்போது அந்த இடத்தில் துவிச்சக்கர வண்டியை போட்டுவிட்டு தப்பித்து ஓடி நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் இரண்டு துவிச்சக்கர வண்டியில் நான்கு பேருமாக மொத்தம் ஆறு பேர் அவரைக் கலைத்து இடைமறித்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இதன்போது செய்தியாளர் சாளினை கீழே தள்ளி விழுத்தி வயிற்றுப் பகுதியில் உதைத்ததோடு முகத்திலும் குத்தியுள்ளனர். இதுதவிர அவ்வீதியில் உள்ள வீடொன்றில் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வயோதிபரிடம் மண்வெட்டியை பறித்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட போது செய்தியாளர் கத்திக்குளறி உயிரைக் காப்பாற்ற முற்பட்டுள்ளார்.

பின்னர் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து சென்ற பின் வீதியில் துடித்துக் கொண்டிருந்த செய்தியாளர் சாளினை யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் மாணவன் ஒருவன் மீட்டு வலம்புரி பத்திரிகை காரியாலயத்தில் சேர்த்தார். இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஐந்துக்கும் மேற்பட்ட கட்டங்களாக விசாரணை செய்ததோடு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகளின்போது சாளின் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில்,

தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பது தெரியாது எனவும், ஒருவரை முன்பு பார்த்த ஞாபகம் உள்ளதாகவும் கூறினார். தாக்குதல் மேற்கொண்டோர் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளாயா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர் எனவும் இதன்போது தான் பொலிஸில் முறைப்பாடு செய்யமாட்டேன். நான் வலம்புரிப் பத்திரிகையில் செய்தியாளராகவுள்ளேன் எனக் கூறி தனது அலுவலக அடையாள அட்டையினைக் காட்டியதாகவும் கூறினார். இதன்போது தெரியாத ஆறு பேர் கொண்ட குழுவினைச் சேர்ந்த நபர் ஒருவர் நானும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்தவன் எனக் கூறி தனது மோட்டார் சைக்கிளில் சாளினை இழுத்து ஏற்றிக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, தான் அவர்களிடமிருந்து தப்பித்ததாகவும் மேற்குறிப்பிடப்பட்ட மாணவன் தன்னை மீட்டு அலுவலகத்தில் சேர்த்தார் எனவும் குறிப்பிட்டார்.

தாக்கப்பட்ட செய்தியாளருக்கு நேற்றிரவு பொலிஸ் பாதுகாப்பு
இனந்தெரியாதோரால் தாக் கப்பட்ட உதயராசா சாளினுக்கு வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொள் வதற்காக வைத்தியசாலைக்குச் சென்ற யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பாதுகாப்பை வழங்குவதற் கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அத்துடன் தாக்குதலை மேற் கொண்ட நபர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Related Posts