வன்னி போர் சூழலில் அகப்பட்ட யாழ். மாவட்ட பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் தம்மையும் உள்வாங்குமாறு கோரி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
கடந்த 2004, 2005, 2006, 2007, 2008ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பட்டதாரிகள், யாழ். பெருமாள் கோவிலடியில் ஒன்று கூடி கூட்டமொன்றினை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது, கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 29 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட நிலையில் தமக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்குமாறு வலியுறுத்தியே பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் கையளிப்பதாக தீர்மானம் எடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் கையளித்தனர்.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2004, 2005, 2006, 2007, 2008ஆம் ஆண்டு பல்கலைக்கழக பதிவினை உடைய பட்டதாரிகள் இன்னும் பட்டதாரிகள் பயிலுனர் நியமனத்தினுள் உள்வாங்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்டு மீண்டும் வந்து கல்வியை முடித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், 2004, 2005, 2006, 2007, 2008 பதிவினை மேற்கொண்ட எமக்கு பட்டதாரிகள் பயிலுநர் நியமனத்தினை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.