வடமாகாண மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஆகியோருடன் மாகாண மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக வடமாகாண வைத்தியர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில்உள்ள 5 மாவட்டங்களையும் இனைத்து இச்சங்கம் உருவாக்கப்படுகிறது.
மன்றத்தின் தலைவர் ப.அச்சுதன் தலைமையில் கிறீன்கிறாஸ் விடுதியில் நேற்றையதினம் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது முதலாவது பணியாக வைத்திய மன்றத்தினால் சேகரிக்கப்பட்ட 1.2 மில்லியன் ரூபா விபத்தின் போது உயிரிழந்த மருத்துவர் செந்வரனின் மகளுக்கு என மருத்துவரின் சகோதரனிடம் வழங்கப்பட்டது.
இக் காசோலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் வழங்கி வைக்கப்பட்டது.
வட மாகாணத்தின் வைத்தியர்களை ஒன்றிணைத்தல், அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் நன்மைகளைப் பேணல், வடக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாளாந்த பணிகளுக்கப்பால் சேவைகளை வழங்குதல், வைத்தியர்களின் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல், மருத்துவர்களின் தொடர் கல்வியூட்டலுக்கான வழிகளை இலகுவாக்கல் என்பவற்றை நோக்கங்களாக கொண்டு இவ் வைத்தியர் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இம் மன்றமானது, மக்களுக்கு சிரமங்களைத் தரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அடையாள வடிவிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக மருத்துவ மன்றத்தின் தலைவர் அச்சுதன் இதன்போது தெரிவித்தார்
நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தி, ஐனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் ஆகியோருடன் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் என வடக்கின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.