வடமாகாண தேசியப் பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; வடமாகாணக் கல்வித் திணைக்களம்

வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.வடமாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக கடமையாற்றிவரும் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்றது. தேசியப் பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் ஏற்கனவே அதிபர்கள் ஊடாகத்  திரட்டப்பட்டிருந்தன.

கல்வி அமைச்சுக்கு தேசியப் பாடசாலைகளின் அதிபல்களினால் வழங்கப்பட்ட விபரங்களினை அடுத்தே மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களில் வன்னிப் பிரதேசப் பாடசாலைகளுக்குத் தமது சுய விருப்பத்தினடிப்படையில் இடமாற்றத் தெரிவினை ஆசிரியர்கள் மேற்கொள்வதையே மாகாணக் கல்வித் திணைக்களம் விரும்புவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வடமராட்சி கிழக்கு மற்றும் தீவக வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் இடமாற்றம் பெறுவதை ஆசிரியர்கள் விரும்ப வேண்டும் என்றும் வன்னிப் பகுதி, தீவகம், வடமராட்சி கிழக்கு ஆகிய வலயங்கள் தவிர்ந்த ஏனைய வலயங்களுக்கான இடமாற்றங்கள்நிபந்தனையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் மாகணக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, தேசியப் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வது நியமன விதிகளுக்கு முரணானது, அதுமட்டுமன்றி வன்னி, தீவகம், வடமராட்சி கிழக்கு ஆகிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்குவது பிழையானது என வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுவின் கவனத்துக்குச் சில ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர் எனவும் அந்தக் குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts