வடமராட்சி கிழக்கிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

fishing-boat_CIயாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து அங்கு தங்கியிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்பகுதி கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரியவருகின்றது.
தென்பகுதியில் இருந்து வந்து வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களுடன் இணைந்து கடல் அட்டை, சங்கு, கணவாய், சிங்க இறால் போன்றவற்றை நவீன முறைகளைப் பயன்படுத்திப் பிடிப்பதற்காக இந்த தென் பகுதிக் கடற்தொழிலாளர்கள் திட்டமிட்டு அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இதனை அடுத்து வடமராட்சி கிழக்குக் கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தினர் அவ்வாறு வந்திருக்கும் தென்பகுதி கடற்றொழிலாளர்களை அங்கிருந்து தொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த புதன்கிழமை தீர்மானமொன்றை நிறை வேற்றியிருந்தனர்.

இந்த தீர்மானத்தை அடுத்து அங்கு தொழில் நடவடிக்கைகளுக்காக வந்திருந்த இந்த தென்பகுதி கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு தென்பகுதி மீனவர்களின் தொழில் நடவடிக்கையினால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் கரைவலை மற்றும் சிறுதொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தத் தொழில் நடவடிக்கைக்கு வடமராட்சிப் பகுதி கடற்றொழிலாளர்கள் சிலர் தென்பகுதித் தொழிலாளர்களுக்குப் படகு மற்றும் இயந்திரம் அத்துடன் தங்குவதற்கு இடத்தையும் வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளியேறிச்சென்ற தென்பகுதி கடற்தொழிலாளர்கள் அங்குள்ள கடற்படையினரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்களை மீண்டும் கடற்றொழிலில் ஈடுபட கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகின்றது.

Related Posts