இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளினால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எம்ஜ்டர்டேமை தளமாக கொண்ட கடல்வள ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் மார்டின் பாவின்ங், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்திய மீனவர்கள் வடமாகாணத்தின் கடற்பரப்பை ஆக்கிரமிக்க ஆரம்பத்துள்ளனர்.
தென்னிந்தியாவின் சுமார் 5000 க்கும் அதிகமான ட்ரோலர் படகுகளின் மீனவர்கள், இலங்கை கடற்பரப்பினையே தமது மீன்பிடி தேவைகளுக்கு நம்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த சுமார் ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள், தமது வாழ்வாதாரத்துக்காக வடமாகாண கடற்பரப்பை நம்பியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், வடமாகாண மீனவர்களின் வாழ்வதாராத்தை சூறையாடிச் செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு உடனடி தீர்வு ஒன்று காணப்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.