வடபகுதியில் பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் உள்ளன :-அரச உயர் அதிகாரிகள்

tellepplai_bundஇலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.

வடக்கில் 42 நலன்புரி நிலையங்கள் உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாஸவும், தெல்லிப்பழையில் சிறிய உயர் பாதுகாப்பு வலயம் காணப்படுவதாக, வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்னவும் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி வவுனியாவில் இருந்த மனிக்பாம் நலன்புரி நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் நலன்புரி நிலையங்கள் என்ற எதுவுமே இல்லை எனவும், அகதிகள் என்று எவருமேயில்லை எனவும் இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் அதன் உண்மை நிலையை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் போட்டுடைத்துள்ளார்.

“தற்போது வடக்கில் 42 நலன்புரி நிலையங்கள் மாத்திரமே உள்ளன. இவை சிறிய கிராமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்ட 400 குடும்பங்களே இங்கு தங்கியுள்ளன” என்று மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, வடக்கு மாகாணத்தில் எந்தவிதமான உயர்பாதுகாப்பு வலயங்களும் இல்லை. இருப்பினும் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. 17 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவே இந்த உயர்பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.

இது பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக் காகவே அமைக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன அங்கு கூறியுள்ளார்.

இதன்மூலம் நலன்புரி நிலையங்கள், உயர் பாதுகாப்பு வலயங்கள் எதுவுமே இல்லை என அரசு கூறிவருவது பொய் என்து வெளிப்பட்டுள்ளது.

Related Posts