வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுக்கு சுமந்திரனின் தீர்மானம் பாதிப்பாகாது – ஜனாதிபதி

சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இன மற்றும் மதவாத பிரச்சினைகள் இல்லாத சூழல் ஒன்றில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுகின்றது. 13 ஆவது அரசியலமைப்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. மாறாக அதன் அமுலாக்கம் குறித்தே சில சிக்கல்கள் உள்ளன. எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். எனவே எதிர்வரும் நாட்களில் 13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் ஆதரிப்பதாக இதுவரையில் அறிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழரசுக் கட்சி. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் மாத்திரம் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்கள் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டே தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்கள் நடுநிலையாக உள்ளனர். எவ்வாறாயினும் சுமந்திரனின் தீர்மானம் எந்த வகையிலும் வடக்கு கிழக்கு மக்களின் என் மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது. அந்த மக்கள் ஏற்கனவே எனக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார்.

Related Posts