வடக்கு கல்விச் செயலர், பணிப்பாளர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human_rightsவடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த இருவரும் தமக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம், தாம் நினைத்த இடங்களுக்கு இடமாற்றங்களை வழங்கி வருகின்றனர். அவர்கள் இவ்வாறு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதால் ஏனைய ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தாபன விதிக் கோவைக்கு அமைவாகவும், 2007/20 தேசிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாகவும் இடமாற்றங்கள் யாவும் இடமாற்றச் சபையினூடாகவே நடைபெறவேண்டும்.

ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 7 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள், இரண்டு வருட ஒப்பந்தத்தில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்று திரும்பி வரும்போது முன்னர் பணியாற்றிய அதே பாடசாலைக்கு மீண்டும் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை என்று இடமாற்றச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, ஏனைய ஆசிரியர்கள் பலர் முன்னர் சேவையாற்றிய அதே பாடசாலையில் பணியாற்ற அனுமதி கோரிய போதும் கல்வி அதிகாரிகளால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பெளதீகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அவர் முன்னர் பணியாற்றிய அதே பாடசாலையில், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தால் மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவரது இந்தக் கோரிக்கை ஏற்கனவே இடமாற்றச் சபையினால் நிராகரிக்கப்பட்டிருந்ததும், இவ்வாறு நடைபெற்றுள்ளது.

மற்றைய ஆசிரியர் கிளிநொச்சி தர்மபுரம் ம.வியில் பணியாற்ற வேண்டியவர். அவர் தாயாரின் சுகவீனத்தைக் காரணமாகக் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் இடமாற்றச் சபையினால் 26.03.2012 தொடக்கம் இரண்டு வருடங்கள் யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் அவரது தாயார் இறந்த நிலையிலும் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் இடமாற்றச் சபையின் எவ்விதமான அனுமதியும் பெறப்படாமல் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அதே பாடசாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளானது அரச தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள, இடமாற்றச் சபையின் அதிகாரங்களை மீறும் செயல் என்பதுடன் ஏனைய ஆசிரியர்களினதும் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

இலங்கை சனநாயக குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரிமை (12) இற்கு அமைவாக இனம், மதம், மொழி, பால், அரசியல் கொள்கை, பிறப்பிடம் காரணமாக எந்தவொரு நபரும் ஓரம் கட்டப்படுதல் ஆகாது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்படி செயலாளர் சட்டம் வழங்கிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவே அமையும்.

இதுகுறித்து ஆக்கபூர்வமான விசாரணையை செய்து ஏனைய ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

Related Posts