வடக்குத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அரசுடன் இணைந்தே போட்டியிடும் : பஷில்

pasil-rajapaksaஎதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமப்பின் தயார் நிலை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

வட மாகாண சபைத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். வடக்குத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்தே போட்டியிடும்.

ஆனால் வடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானதாக இருக்கும். வடக்குத் தேர்தலில் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான முறையில் போட்டியிடுகின்றது. இதுவரை காலமும் அவ்வாறான பலமான நிலைமை எமக்கு இருக்கவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் மக்கள் ஆதரவுடன் பலமாக உள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை போன்று வடக்குத் தேர்தலில் மேலும் பல கட்சிகளுடன் இணைந்துபோட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

Related Posts