வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்!

gov_logமீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது “மீள்குடியேற்றமே’ தவிர ‘மீள்குடியமர்த்தல்” அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளதாகவும், இதில் முதற் கட்டமாக 500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளன என்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வீடுகளின் திறப்பு விழா இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடுகள் வெலிஓயா பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த 500 வீடுகளும் நான்கு கிராமங்களை உள்ளடக்கியதாகவுள்ளன என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதுபோன்ற வீடுகள் பதவியா பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

Related Posts