வட மாகாண மக்களின் போக்குவரத்து ஒழுங்குகளை சீர் செய்யும் நோக்கோடு 101 நாள் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி,போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்…
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், பார ஊர்தி உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாக சபைகள் கலைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைகள் உருவாக்குவதோடு, தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுக்கான வட மாகாண இணையம் ஒன்றினை உருவாக்கவுள்ளோம்.
இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்துச்சங்கங்களும் புனரமைக்கப்படும். இதன் மூலம் இதுவரை இருந்து வந்த நிர்வாகச் சிக்கல்கள் நீங்கும் என்றும் வட மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபைக்கான சட்ட மூலத்தை உருவாக்குவதும் பல விடயங்களை நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார் .
அத்தோடு இவ்வாறான அமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் வட மாகாண மக்களுக்கு மிகவும் வினைத்திறனுள்ள பயன்பாடு மிக்க போக்குவரத்து சேவையினை வழங்க முடியும் என்றும் கூறியதோடு எதிர்காலத்தில் வீதிப் போக்குவரத்து தொடர்பாக இருக்கின்ற ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சிலவேளைகளில் குற்றத்தின் தன்மைக்கேற்ப போக்குவரத்துக்கான வீதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செயப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் .