வடக்கில் பெரும்பான்மையினர் அதிகரித்து விடுவார்கள்:முதலமைச்சர்

வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

vicky

இதில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது,

‘வட மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுசரணையுடன் நியமிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு இடம்பெறாமல் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட எமது உரிமைகள் மறுக்கப்பட்டு பிரதம செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இராணுவத்தின் அதிகார வேகத்தில் ஆக்கிரமித்த ஆளுநரின் ஆட்சியில் வடமாகாண சபை நடைபெற்று கொண்டிருக்கின்றது. வடமாகாண அலுவலர்கள் எங்கே நாங்கள் ஆளுநரின் கோபத்திற்கு ஆளாகி விடுவமோ என்ற பயத்திலிருக்கின்றார்கள்.

இராணுவத்தை வட மாகாணத்தில் தொடர்ந்து நிலைத்து வைத்தால் வட மாகாண மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. 2012ஆம் ஆண்டு ஐ.நா.வின் தீர்மானத்தில் முக்கிய நோக்கம் வடகிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுவதாக இருந்தது.

ஆனால் அதற்கேற்ற விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றவா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பரக்கவிடப்பட்டன.

அண்மையில் வந்த வெளிநாட்டு தலைவர்கள் அனைவரும் வட – கிழக்கு மாகாணங்களுக்கு போதிய அதிகார பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதத்தில் கருத்துக்கள் வெளியீடப்பட்டிருந்தார்கள்.

ஆனால் இவ்அதிகார பரவாக்கத்திற்கு தற்போது இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் போதியளவாக அமையமாட்டாது. அடுத்த கட்டமாக நாங்கள் சர்வதேச சமூகத்தையே நம்ப வேண்டியுள்ளது. அவர்கள் மூன்று மாதங்களுக்குள் பல நன்மைகளை அளிப்பதாக எமக்கு உறுதியளித்துள்ளனர்.

அந்த நன்மையை பெற நாங்கள் உரியனவற்றைச் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக 2012ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தது. 20 வருட இராணுவ ஆட்சியில் மேலிடம் சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளைகளாக எமது அலுவலகர்களை மாற்றியுள்ளனர் என்பது கண்கூடாக தெரிகின்றது.

அதற்காக அவர்களை நான் கடித்துக்கொள்ளமாட்டேன் மாறாக அவர்களை எண்ணி கவலைப்படுகின்றேன். ஆட்சித்திறனின் அபிவிருத்திப்பணி நிர்வாகத்தில் உள்ளேயும் புறத்தேயும் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களை 1958இலும் 1983இலும் தென்னிலங்கையிலிருந்து விரட்டப்பட்ட பின்னர் தான் வடக்கில் இராணுவ உதவிகளுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இனப்படுகொலைக்கு ஒப்பானது.

வட, கிழக்கு மக்களை தமிழ் பேசும் மக்கள் என்று அடையாளம் காட்ட முடியாத அளவிற்கு இது ஊடுருவி நடைபெற்று வருகின்றன. வடகிழக்கில் இப்போதிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறிமுறை ஒன்று விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அசண்டையினமாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் நிலைமை மாற்றி அமைக்க முடியாத அளவிற்கு படுமோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதை கூறுகின்றேன்.

சர்வதேச சமூகத்தின் உதவிகளின் ஊடாக விதவைக்குடும்பங்கள், பெண்களை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், அங்கவீனமானவர்கள், போரினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்வோம்.

சர்வதேசத்தின் நெருக்குதல் இல்லாமால் அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பகிர்வையும் எமக்கு வழங்காது’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts