வடக்கில் இன்னும் 82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடி அகற்ற வேண்டிய 2004 சதுர கிலோ மீற்றரில் 82 சதுர கிலோ மீற்றரே எஞ்சியுள்ளது. அதுவும் வனப்பகுதி என அவர் குறிப்பிட்டார்.
கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளைவிட கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
புலனாய்வு துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் அதிக போதைப் பொருள் வர்த்தக கொடுக்கல் வாங்கல் சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறுவதால் அதனை தடுக்க தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒவ்வொரு மீன்பிடி படகுகளையும் சோதனை செய்ய முடியாது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.