இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று இந்திய ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் அவற்றை முற்றாக மறுத்துள்ளன.
இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளில், இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றிய கரிசனை மற்றும், இந்தியாவினது மூலோபாய நலன்களுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்காக, வடக்கு மாகாண முதல்வரை கூடிய விரைவில் புதுடில்லிக்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகிறது.
கடந்த மாதம், ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கேற்காமல் விட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த அவசர முயற்சியில் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டால், இலங்கை தொடர்பான எமது கொள்கைகளை சமப்படுத்த உதவும் என்றும், ஐ.நா மனித உரிமைகள் சபையில் வாக்காளிக்காது போனாலும், இலங்கைத் தமிழர்களைக் காக்க நாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதற்கு உதவும் என்றும் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்னர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பயணம் மேற்கொள்வது, இலங்கைத் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளது என்பதை காட்டுவதற்கு உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறு இந்தியாவுக்கு செல்லும் பயணத் திட்டம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேபோன்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும் அவ்வாறான அழைப்பு எதுவும் வடக்கு முதலமைச்சருக்கு விடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.