பருத்தித்துறையினைச் சேர்ந்தவரும் புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (30) என்பவர் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஐந்து மீனவர்களைவிட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்றுகொண்டிருக்கையில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர்.
அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பல நாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அத்துடன், மேலும் ஒரு மீனவரையும் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறியிருந்த நிலையிலே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி