யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றது: சமவுரிமை இயக்கம்

1யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றதாக சமவுரிமை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சமவுரிமை இயக்கத்தினரால் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை, காணிக் கொள்ளை போன்ற விடயங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டை மற்றும் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்த 4 வருடங்களின் பின்பும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் யுத்த சூழ்நிலையினை அரசாங்கம் தொடர்ந்தும் பேணி வருகின்றது. கிழக்கில் சிவில் நிர்வாகம் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளமையும் வடக்கில் நடக்கும் இராணுவ நிர்வாகமும் அதற்கு உதாரணமாக காணப்படுகின்றன.

அத்துடன், இராணுவ நிர்வாகத்தின் கீழ், மக்களின் ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதுடன், கடத்தல் காணாமல் போதல், கொலை, கொலை அச்சுறுத்தல், சித்திரவதை போன்றன நல்ல உதாரணங்களாக அமைகின்றன.

இதேவேளை, தமிழ் மக்களின் கலாசார உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவ பலவந்தத்தினை பயன்படுத்தி வடக்கு மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படையாக தெரிகின்றன.

மேலும், கடந்த டிசெம்பர் மாதம் பல்கலைக்கழக செயற்பாட்டாளர்கள் மீது அடக்குமுறை தொடுக்கப்பட்டு மாணவர் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஜனநாயகத்திற்கு முரணாக தடுத்து வைத்துள்ளனர்.

இந்த ஜனநாயகத்திற்கு முரணான தான்தோன்றித்தனத்திற்கு எதிராக பலம்வாய்ந்த மக்கள் சக்தியை கட்டியெழுப்ப வேண்டும்.

சில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இந்த நிலையினைப் பயன்படுத்தி இனவாத்தினையும், மதவாத்தினையும் பரப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளமுயற்சிக்கின்றன. இனவாதம் எமது சமூகத்தில் பாரிய அழிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்கால சந்ததியினருக்கு மீண்டும் அந்த அழிவை பரிசாக கொடுக்க எங்களால் முடியாது.

எங்களது மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட வேண்டும். இனவாதமும், மதவாதமும் மக்களை பிரிக்கிறது’ என்று துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts