யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாவதும் தொடர்பாக பத்திரிகையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
சிறுவர், பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கான தண்டணைகள் பற்றி செய்திகள் வெளிவருகின்றபோது சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளதாக தான் கருதுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்படுகின்றவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது அவர்களின் அவர்கள் பற்றிய முழுமையான விபரங்களை பத்திரிகைகள் வெளியிட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகின்ற சிறுவர் பெண்களின் நலன்களில் ஊடகங்களும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிட்டனர்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கு பாடசாலை செல்லாமல் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாத காரணத்தினை தெரிந்து பெற்றோர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பத்திரிகை ஆசிரியர் ஒருவரினால் அரச அதிபரிடம் வேண்டு கோள்விடுக்கப்பட்டது.
இதையடுத்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது கவனம் செலுத்தப்படுமென யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி மாவட்டச் செயலக சிறுவர் அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வாராந்தம் பத்திரிகைகளில் ஆக்கங்களைப் பிரசுரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.