யாழ். மாநகர சபையை உடன் கூட்டவும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

jaffna_municipalயாழ். மாநகர சபையை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாழ்.மாநகர சபையின் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்று கடைகள் தொடர்பில் விவாதங்களை நடத்துவதற்கே சபையை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் கையளித்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையில்லாமல் பலருக்கு வர்த்தக நோக்கத்திற்காக கையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கு விசேட கூட்டமொன்று உடனடியாக நடத்தப்படல் வேண்டும்.

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 100ற்கு மேற்பட்ட காணித்துண்டுகளும், கடைகளும் திட்டமிடப்படாத நிலையில், வரையறையில்லாது பலருக்கு வர்த்தக நோக்கத்திற்காகவும், வேறு தேவைகளுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஒழுங்கற்ற முறையில் இக்காணிகளை பகிர்ந்தளிப்பதனால் எமது வரியிறுப்பாளர்களும் சபை எல்லைக்குள் வதிவோரும் நிரந்தர வர்த்தகர்களும் பாதிக்கப்படுவதாக எமக்கு புகார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் சம்பந்தமாக மாநகர சபையினால் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படாமையினால் சபையின் நடவடிக்ககைள் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த முடியாதுள்ளது.

தற்காலிகமாக கொடுக்கப்பட்ட காணித்துண்டுகள் எத்தனை, தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட கடைகள் காணிகள், கடைகள் கொடுக்கப்பட்ட இடங்கள், வீதிகள் பற்றிய விபரங்கள், காணிகள் கடைகள் பெற்றுக் கொண்டவர்களின் பெயர், முகவரிகளுடன், நிரந்தரமாக வசிப்பவர்கள், வெளியூர், வெளிமாவட்டங்களில் வசிப்பவர்கள் ஆகியோரின் விபரங்கள், மாதாந்த மற்றும் வாடகை வரிகள் உட்பட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அதுபற்றிய விபரங்கள் போன்றவற்றின் விளக்கங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, திட்டமிடப்படாத இச்செயற்பாட்டினால் அழகான எமது நகரமும் அழகிழந்து காணப்படுகின்றது. இவ்விடயம் சம்பந்தமக விவாதிக்கும் பொருட்டு இம்மாத இறுதிக்குள் விசேட கூட்டமொன்றினை கூட்டுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Related Posts