யாழ். போதனா வைத்தியசாலையில் புதிய பிரசவ விடுதி அடுத்த வருடம்

யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது பிரசவ விடுதி அமைந்துள்ள இரண்டு மாடிக்கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சகல வசதிகளும் கொண்டதாக பிரசவ விடுதிக்கான புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது இந்தத் தகவலை வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போது பிரசவ விடுதி அமைந்துள்ள மாடிக் கட்டடத்தில் ஒரு சில இடங்களில் சிமெந்துப் பூச்சு சொரிந்து விழுந்துள்ளது. அதனால் நீண்ட காலத்துக்கு அந்தக் கட்டடம் நின்று நிலைக்கும் என்பது சந்தேகமே.

இத்தகைய நிலையற்ற கட்டடத்தால் விடுதிகளில் உள்ள பிரசவத் தாய்மார்கள், குழந்தைகள் என்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.

சில மாதங்களுக்கு முன்னரே விடுதியில் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அது தொடர்பில் ஆராயப்பட்டு தற்போது அந்தக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்தை அமைப்பதற்கான முன் ஆயத்தப்பணிகளை விரைவுபடுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் புதிதாக அமையவுள்ள கட்டடத்தில் விடுதிகள், கட்டில்கள், வைத்தியசாலைத் தொழிலாளிகள் தங்குவதற்கான அறைகள் என்பன உள்ளடங்க உள்ளன.

இதற்குரிய திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் விடயங்களுக்குத் தேவையான நிதி தொடர்பில் கட்டடத்திணைக்களத்தினால் கணிப்பிடப்படவுள்ளது.

பின்னர் அந்தக் கணிப்பீடு சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. 2013 ஆம் ஆண்டுத் திட்டத்திலே புதிய கட்டடத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Related Posts