யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம்

hospital_newbuldingயாழ்.போதனா வைத்தியசாலைக்கு சீனா அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாவில் புதிய கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலொன்று யாழில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தற்போது காணப்படும் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது வைத்தியசாலையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 156 தொண்டர்களுக்கு மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இதன்போது, வைத்திய சேவைகள், சிகிச்சைக் கூடங்களினதும் ஆய்வு கூடங்களினதும் செயற்பாடுகள், நோயாளர் விடுதிகள், வைத்தியசாலையின் பாதுகாப்பு, துவிச்சக்கர வண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புனரமைக்கப்பட வேண்டிய வைத்தியசாலை உள்ளக வீதியினை உடனடியாக புனரமைக்குமாறு யாழ்.மாநகர சபை முதல்வருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

Related Posts