கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் வந்த சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி இன்று (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதாக கனகராஜன் குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 45 பயணிகளுக்கும் ஆபத்து எதுவும் இல்லாத போதும், பஸ்ஸின் பின்பகுதியில் வைக்கப்பட்ட அவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து புதன்கிழமை இரவு யாழ். நோக்கி புறப்பட்ட குறித்த பஸ் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புளியங்குளத்திற்கும் கனகராஜன் குளத்திற்கும் இடைப்பட்ட குறிச்சுட்டான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் பின்பகுதி எரியத் தொடங்கியுள்ளது.
உடனடியாக பஸ்ஸில் பயணித்த பயணிகளை கீழே இறங்கியமையினால் அவர்களுக்குப் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி அனர்த்தமானது பஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடம்பெற்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.