யாழ். நகரப் பகுதியில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற குழப்பச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு கல்வித்திணைக்கள பணியாளர் உட்பட அறுவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 34 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (04) உத்தரவிட்டார்.
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதி சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை (01) இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 45 பேரும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
புதன்கிழமை (03) மூன்றாவது பிரிவினராக 43 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, அவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 ஆவது பிரிவினராகிய 40 பேர் இன்று வியாழக்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இவர்களில் 6 பேரை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதித்ததுடன், சந்தேகநபர்களின் பிரிவுகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் கூறினார்.
ஏனைய 34 பேருக்குமான பிணை மனு மன்றில் கோரப்பட்ட நிலையில், இப்பிணை மனுக்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் வகையிலான தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.