யாழ்.கே.கே.எஸ் வீதி தட்டாதெருச் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
ஹயஸ் வாகனத்தில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த இளைஞர் குழுவுக்கும் இடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை குறித்த இரு இளைஞர் குழுக்களுக்கும் இடையில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஒரு மதுபான நிலையத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மேற்படி சம்பவத்தில் முரண்பட்ட இரு குழுவினரும் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு மதுபான விற்பனை நிலையத்தில் சந்தித்ததை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இச் சம்பவத்தில் ஹயஸ் வாகனம் முழுமையாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனத்தில் வந்த இருவர் பலத்த தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வீதியில் விழுந்து கிடந்தனர்.
இதன் பின்னர் அங்கு வந்த பொது மக்களால் காயப்பட்ட இருவரும் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் 1 மணித்தியாலம் வரைக்கும் நீடித்த மேற்படி மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நீண்ட நேரத்தின் பின்னரே வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.