யாழ்.சாலைக்கு புதிய பேரூந்துகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – டக்ளஸ்

மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு நேர்மையான உண்மையான நடைமுறைச்சாத்தியமான வழியில் தீர்வினை காண்பதையே எமது அரசியல் நோக்காக கொண்டுள்ளோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

depoo-1

கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற யாழ்.சாலை ஊழியர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

depoo-2

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.சாலையின் வருவாயை அதிகரிக்கும் முகமாகவும் அதனூடாக உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான செயற்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில் அனைவரும் ஐக்கியத்துடனும், புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் கடமைகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

போக்குவரத்து சேவையானது மக்களுக்கான அத்தியாவசிய தேவையாக உள்ளபடியால் இச்சேவையை நீங்கள் யாவரும் உணர்ந்து கொண்டவர்களாக செயற்படும் போதே அதனூடாக மக்கள் முழுமையான பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில் மக்களுக்கான போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை ஆகிய சாலைகளுக்கு புதிய பேரூந்துகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இங்குள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விசேட செயலமர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கான திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ்.சாலையின் தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் ஏனைய சாலைகளுக்கு மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களின் சாலைகளுக்கும் முன்மாதிரியாக அமையப் பெறுதல் வேண்டும் என்பதுடன், சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் அனைத்தும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுதல் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே உத்தியோகத்தர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்.சாலை ஊழியர் சங்கத்தினர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.

இதன்போது பிரதான பிராந்திய முகாமையாளர் அஸ்ஹர், ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts