யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த இரு பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இனம்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் ஒரு பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டனர்.
அதன் பின்னர் பஸ் புறப்பட்டு எழுதுமட்டுவாள் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டது என குறித்த பயணி குறிப்பிட்டார்.
இத் தாக்குதல் சம்பவம் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பிறகே தம்மை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் காத்திருந்தே பயணத்தை தொடர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன.
இவ்வாறான தாக்குதல் இதற்கு முன்னதாகவும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.