யாழ். குடாநாட்டில் 1033 காணிகள் மற்றும் வீடுகள் முப்படையினர் வசம்

யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் கைப்பற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இவற்றில் 29 காணிகளே அரச நிலங்களாக உள்ளன. ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர், தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள காணிகள் மற்றும் வீடுகளை தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் படையினர், கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இராணுவத்தினர் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிய காணிகளின் விவரங்களை வழங்குமாறு ஆளுநர் பணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பிடியில் 716 காணிகள் உள்ளன. இவற்றில் வீட்டுடன் இணைந்த காணி 378, தனியார் காணி 283, அரச காணி 9, வியாபார நிறுவனங்கள் 46 இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

பொலிஸ் கட்டுப்பாட்டில் 64 காணிகள் உள்ளன. இவற்றில் வீட்டுடன் இணைந்த காணி 57, தனியார் காணி 5, அரச காணி 1, வியாபார நிறுவனங்கள் 1 என்பன உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் 253 காணிகள் உள்ளன. இவற்றில் வீட்டுடன் இணைந்த காணி 123, தனியார் காணி 104, அரச காணி 19, வியாபார நிறுவனங்கள் 7 கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தக் காணிகளையும் வீடுகளையுமே கையகப்படுத்துவதற்கு படைத்தரப்பு முயல்வதாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Posts