யாழ். கல்லுண்டாய்வெளி பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டிவந்த யாழ். மாநகர சபை, கடந்த சில நாட்களாக கல்லுண்டாய்வெளியை அண்மித்த யாழ் – அராலி வீதியில் குப்பைகளை கொட்டி வருகின்றது.
இதனால், அப்பகுதியில் பயணம் செய்வோர் மற்றும் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கூறும்போது,
கல்லுண்டாய்வெளியில் குப்பைகள் கொட்டி வந்த போதும், தற்போது பெய்த மழையால் கல்லுண்டாய்வெளிக்கு உழவு இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால், அப்பகுதியில் பாதையொன்று போடவேண்டிய தேவை காணப்படுகின்றது. பாதை அமைப்பதற்கு வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் அனுமதி வேண்டும்.
அனுமதி பெறுவதற்கான கடிதம் பிரதேசசபை தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை. இதனாலேயே குப்பைகளை அகற்றுபவர்கள் அதனை வீதிக்கு அண்டிய பகுதியில் கொட்டி வருவதாக கூறினார்.
வீதி அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படாமை குறித்து வலி. தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சிவகுமாரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்லுண்டாய்வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் அராலி, வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதி மக்கள் மட்டுமன்றி, நெற்செய்கை மேற்கொள்ளும் வயல் நிலங்களும் பாதிப்படைகின்றன.
அத்துடன், குப்பைகள் எரியூட்டப்படுவதால் ஏற்படும் புகை மற்றும் துர்நாற்றம் ஆகியன அப்பகுதியை கடுமையான சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கி வருகின்றன.
மேலும் யாழ். நகர பகுதியில் இருந்து அகற்றப்படும் மலக்கழிவுகளும் அப்பகுதியிலேயே கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.